தமிழக அரசின் தொடர் முயற்சியால் மின்துறையில் ரூ.2,200 கோடி சேமிப்பு

குன்னூர், ஜூலை 28: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உபாசி அரங்கத்தில் மின்துறை சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதகை மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை வகித்தார். குன்னூர் செயற்பொறியாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். ஊரக மின்மயமாக்கல் கழகத்தை சேர்ந்த வரதராஜன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக உபதலை பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி கலந்து கொண்டார்.முன்னதாக, குன்னூர் உதவி பொறியாளர் ஜான்சன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஒரு பகுதியாக மின்சார அமைச்சகம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின.

இதில், ஊரக மின்மயமாக்கல் பொறியாளர் வரதராஜன் பேசியதாவது:

கடந்த 2014ம் ஆண்டில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 554 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக 1 லட்சத்து 85 ஆயிரம் மெகா வாட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இந்தியா அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து 1 லட்சத்து 63 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. 2015ல் கிராமப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 மணி நேரம் இருந்தது. தற்போது, 22.5 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் குறைகளை கேட்டு தீர்ப்பதற்கு மின்வாரியம் 24 மணி நேரமும் செயல்படும் அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டது முதல் 9 லட்சத்து 72 ஆயிரத்து 180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தொடர் முயற்சியால் 2021-2022ம் நிதியாண்டில் மின் உற்பத்தி நிலையங்களில் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.2200 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். புதிதாக தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 8.16 லட்சம் புதிதாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 47 துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: