×

ஈரோடு-பாலக்காடு பாசஞ்சர் ரயில் நாளை மறுநாள் முதல் இயக்கம்

ஈரோடு, ஜூலை 28: கொரோனாவால் ரத்து செய்யப்பட்டிருந்த ஈரோடு-பாலக்காடு பாசஞ்சர் ரயில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (30ம் தேதி) முதல் இயக்கப்பட உள்ளது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பாலக்காட்டிற்கும், பாலக்காட்டில் இருந்து ஈரோட்டிற்கும் காலை, மாலை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது.  இந்த ரயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலை மீண்டும் இயக்க கோரி முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஷா மற்றும் ரயில் பயணிகள் தென்னக ரயில்வேக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், பாலக்காடு- ஈரோடு பாசஞ்சர் ரயில் நாளை (29ம் தேதி) முதலும், ஈரோடு-பாலக்காடு பாசஞ்சர் ரயில் நாளை மறுநாள் (30ம் தேதி) முதலும் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு-பாலக்காடு டவுன் (06818), பாலக்காடு டவுன்-ஈரோடு (06819) பாசஞ்சர் ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் வியாழக்கிழமை தவிர்த்து இயக்கப்பட உள்ளது. ஈரோடு-பாலக்காடு ரயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, தொட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், கோவை, வாளையார் வழியாக பாலக்காட்டிற்கு 10.55 மணிக்கும், பாலக்காடு டவுனிற்கு 11.45 மணிக்கும் சென்றடையும். இதேபோல, பாலக்காடு டவுன்-ஈரோடு ரயில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டிற்கு மாலை 7.10 மணிக்கு வந்தடையும். பாலக்காடு டவுன்-ஈரோடு ரயில் நாளை(29ம் தேதி) முதலும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரயில் நாளை மறுதினம் (30ம் தேதி) முதலும் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Erode ,Palakkad ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...