திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு அமைக்க பு.புளியம்பட்டி நகராட்சிக்கு 3 ஏக்கர் நிலம் சுவாதீனசான்று வருவாய்துறை ஒப்படைப்பு

சத்தியமங்கலம், ஜூலை 28: பு.புளியம்பட்டி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் வகையில், வழங்கப்பட்ட 3 ஏக்கர் நிலத்திற்கான சுவாதீன சான்றை வருவாய் துறையினர் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி மொத்தம் 18 வார்டுகள் கொண்டது. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நம்பியூர் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கில் கொட்டப்பட்டது. இந் நிலையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டன.  இதனால், அவ்வப்போது குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் கிளம்பியது.

மேலும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டது. தினசரி மலைபோல குவியும் குப்பைகளை சேகரித்து வைக்க முடியாமல் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு புஞ்சை புளியம்பட்டி நிர்வாகம் பெரிதும் பரிதவித்தது.  திமுக அரசு பொறுப்பேற்றவுடன் புஞ்சை புளியம்பட்டி நகர செயலாளர் பி.ஏ. சிதம்பரம் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக மாற்று இடம் கோரி நகர செயலாளர் சிதம்பரம் தலைமையில் வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி, நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆதரவுடன் நகர செயலாளர் சிதம்பரம், ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோபி கோட்டாட்சியர் மற்றும் சத்தியமங்கலம் வட்டாட்சியர் உள்பட அதிகாரிகளை சந்தித்து நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கிடங்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு கட்ட தொடர் முயற்சிக்கு பின்னர், நகராட்சிக்கு 3 ஏக்கர் நிலம் தர ஒப்புதல் அளித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கடந்த ஜூன் மாதத்தில் முன்நுழைவு அனுமதி ஆணை வழங்கினார். வருவாய் துறைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முறையாக நேற்று நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வருவாய்துறை சார்பில் புஞ்சை புளியம்பட்டி நில வருவாய் ஆய்வாளர் யோக நரசிம்மன் 3 ஏக்கர் நிலத்திற்கான சுவாதீன சான்றை நகராட்சி கமிஷனர் சக்திவேல், தலைவர் ஜனார்த்தனன், துணை தலைவர் பி.ஏ. சிதம்பரம் ஆகியோரிடம் முறைப்படி வழங்கினார். இதில், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ்,  நகர திமுக துணை செயலாளர் முருகேசன், திமுக நகர பொறியாளர் அணி அமைப்பாளர் குமர செந்தில்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: