தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களால் ஒளிமயமான நிலை

திருச்செந்தூர், ஜூலை 28: திருச்செந்தூரில் மின்சக்தி அட் 2047 திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெற்று வரும் அமுத பெருவிழாவில் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்க எரிசக்தி அமைச்சகம், மின்சார அமைச்சகம், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி அட் 2047 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் இத்திட்டத்திற்கான துவக்க விழா நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆர்டிஓ புஹாரி, தூத்துக்குடி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், நகராட்சி சேர்மன் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் ரெமிங்டன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது அதிகமான மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 32.6 சதவீதம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் வரக்கூடிய மழைக்காலங்களில் எந்தவித மின்தடை ஏற்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே மின் நிறுத்தங்கள் செய்யப்பட்டு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே வரும் காலத்தில் மின்சாரத்திற்கு எந்தவித குறையும் இல்லை என்ற நிலை ஏற்படும். ஒன்றிய அரசு நிதி உதவி மூலமாக தமிழகத்தில் பல மின்திட்டங்கள் அனைத்து பகுதிகளும் செயல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக ஒளிமயமான நிலை உருவாகும். முதல்வர் நடவடிக்கையால் இலவச மின் திட்டத்தில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. மின் துறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து பல மின் திட்ட பணிகளை செய்து வருகிறது, என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் திட்டம் குறித்து காணொலி திரையிடப்பட்டு, மேல ஆத்தூர் பஞ். தலைவர் சதீஷ்குமார், பயனாளிகள் கருத்துரையாற்றினர். இதில் கோட்ட செயற்பொறியாளர்கள் ரெமோனா, விஜய சங்கரபாண்டியன், உதவி நிர்வாக அலுவலர் கலைகண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் பேச்சிமுத்து, செல்வகணேஷ், ஜெயக்குமார், முத்துகிருஷ்ணன், ரவீந்திரகுமார், முருகன், மகாலிங்கம், முத்துராமன், ஜெபஸ்சாம், சிராஜூதின், நீந்தா ஜெஸ்லின், ராதிகா உள்ளிட்ட மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். உதவி செயற்பொறியாளர் ராம்மோகன் நன்றி கூறினார்.

Related Stories: