நாங்குநேரியில் 36 மிமீ, நெல்லையில் 16 மிமீ பதிவு 2ம் நாளாக கொட்டி தீர்த்த கனமழை ஈரடுக்கு பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை, ஜூலை 28: நெல்லை மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் கன மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அதே வேளையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிநின்றதால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்ப்டடது.  நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில் கடந்த வாரம் முழுவதும் கோடையைப் போல் வெயில் நிலவியது. அதேவேளையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே நெல்லை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 நேற்று முன்தினம் நெல்லை மாநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால்  மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அதே வேளையில்  தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்றதால் மக்கள் சிரமப்பட்டனர்.

குறிப்பாக சாலையே கண்ணுக்கு தெரியாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழையால் வாகனம் ஓட்ட முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாங்குநேரியில் 36 மி.மீ. மழை பெய்தது. நெல்லை வட்டாரத்தில் 16 மி.மீ. மழை பெய்தது. பாபநாசம் பகுதியில் 9 மி.மீ.,  பாளை வட்டாரத்தில் 7 மி.மீ. என மழையளவு பதிவானது. சேரன்மகாதேவியில் 1.40 மி.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக பெய்த கனமழையால் பூமியின் வெப்பம் ஓரளவு தணிந்ததால் சற்று குளுமை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்

பேட்டை பெரிய பள்ளிவாசல் தெருவை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்தும் வெளியே செல்ல வழியின்றி சிக்கித் தவித்தனர். ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. கழிவுநீரோடையில் அடைப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மழைநீர் வடிய வழியின்றி தேங்கிநின்றதால் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். எனவே, பருவமழைக்கு முன்னர் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: