×

வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் அவலம் பாளை ராஜகோபாலசுவாமி கோயில் புதிய தேருக்கு கூண்டு அமைக்கப்படுமா?

நெல்லை, ஜூலை 28: பாளையில் உள்ள பாரம்பரியமிக்க அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோயில் சிறப்புவாய்ந்த வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு தேரோட்ட வைபவத்திற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பழைய தேரானது, காலங்கள் பல கடந்ததாலும், முறையான பராமரிப்பின்றியும் பழுதடைந்தது. இதையடுத்து புதிதாக தேரை உருவாக்க திட்டமிடப்பட்டது. கோயில் பக்தர்கள் மற்றும் உபயதாரர் நிதியுதவியுடன் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேரை வடிவமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோயில் வளாகப்பகுதியிலேயே நடந்தது. தேரின் மேல் பகுதி அலங்கார தட்டுகள் நிரந்தரமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் உள்பகுதியில் 2 துணை சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர் கோயிலின் முகப்பு பகுதியில் 4 குதிரை பொம்மைகள் பூட்டப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

  காக்கும் கடவுளான விஷ்ணுக்கு உரிய லட்சணங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இத்தேரில் தசவதார சிற்பங்கள், கண்ணன் லீலைகள், 12 ஆழ்வார் சிற்பங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திருமழிசை கஜேந்திர ஸ்தபதி குழுவினர் வடிமைத்துள்ளனர். அத்துடன் பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பக்தர்களும் இலகுவாக இழுக்க ஏதுவாக தேரில் சங்கிலி வடம் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் பங்குனி உத்திர திருவிழாவின் சிகரமாக தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடந்தது.

இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள், தேரை இழுத்து நிலையம் சேர்த்தனர். இதையடுத்து தேர் கனமான பிளாஸ்டிக் கவரால் மூடிவைக்கப்பட்டது. ஆனால், ஆடி மாதம் வீசிய பலத்த காற்றில் இதன் பெரும்பாலான பகுதி பறந்துவிட்டது. இதனால் பாளையில் திறந்தவெளியில் உள்ள இத்தேரானது கொளுத்தும் வெயிலில் காய்ந்தும், கொட்டும் மழையில் நனைந்தும் பாழாகி வருகிறது. இதை கண்டு வருந்தும் பக்தர்கள், நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு  உரிய தேருக்கு பெரிய அளவிலான கூண்டு அமைக்கப்பட்டுள்ளது போல் கோபாலசுவாமி கோயில் தேருக்கும் நிழற்கூண்டு அமைக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : Avalam Palai Rajagopalaswamy Temple ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ