×

போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 340 கடைகள் அமைப்பு பாளை மார்க்கெட்டை நவீனமாக்கும் பணியை விரைவில் துவக்க திட்டம்

நெல்லை, ஜூலை 28: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை காந்தி மார்க்கெட்டை நவீனமயமாக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதையொட்டி ஜவஹர் மைதானத்தில் 160 கடைகள் தற்காலிகமாக செயல்பட உள்ள நிலையில் பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 360 தற்காலிக கடைகள் அமைக்கும் பணி துவங்கியது.  நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் மெகா திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பாளை காந்தி மார்க்கெட்டையும் அப்பகுதியுள்ள கடைகளை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு நவீனமயமாக கட்ட கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால், அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்திட்டம் தற்காலிகமாக தள்ளிப்போனது. இந்நிலையில் வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகம் இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை  காந்தி மார்க்கெட்டை நவீனமயமாக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.  இதையொட்டி ஜவஹர் மைதானத்தில் 160 கடைகள் தற்காலிகமாக செயல்பட உள்ள நிலையில்  பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 360 தற்காலிக கடைகள் அமைக்கும் பணி  துவங்கியது. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாளை ஜவஹர் மைதானத்தில் 160 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு முதற்கட்டமாக 160 வியாபாரிகள் இடம் மாற உள்ளனர். இங்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் தேவையான கூடுதல் வசதிகளை செய்துவருகின்றனர்.

மேலும் மின் இனைப்பு பெற பணம் கட்டியுள்ளனர். இதற்கான பணிகளும் நடைபெறுகின்றன. இங்கு மின் இணைப்பு கிடைத்ததும் 160 கடைகள் இடம் மாறி தற்காலிகமாக விரைவில் செயல்படத்தொடங்கும் எனத் தெரிகிறது. இதேபோல் மேலும் 340 கடைகளை பழைய போலீஸ் குடியிருப்பு வளாக மைதானத்தில் அமைத்து கொடுக்கும் பணி தற்போது துவங்கியுள்ளதால் இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் இங்கு மீதம் உள்ள கடைகள் தற்காலிகமாக இடம் மாறி செயல்படத்தொடங்கும். மார்க்கெட் பகுதியில் செயல்பட்ட கோஆப்டெக்ஸ் உள்ளிட்ட கடைகளும் முழுமையாக மாற்றப்பட்டுவிட்டதால் இந்த கட்டிடமும் இடிக்கப்பட உள்ளது.

நவீன வசதியுடன் கடைகள்
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில் ‘‘பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உரிய கடைகள் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தற்காலிகமாக இடம் மாற முடிவு செய்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளை பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையம் 2 வது மாடி கடைகள் பல செயல்படாமல் உள்ளது. பாளை மார்க்கெட் கடைகளை புதுப்பித்து கட்டும் போது போதிய நவீன வசதிகளுடன் ஓரளவு விசாலமாக கடைகளை அமைத்துத்தர தக்க   நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : Palai Market ,
× RELATED பாளை மார்க்கெட் நவீனமயமாக்கும் பணி...