கடலூர் முதுநகரில் மாயமான 3 சிறுமிகள் மீட்பு

கடலூர், ஜூலை 28: கடலூர் முதுநகரை சேர்ந்த 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகள் நேற்றுமுன்தினம் மாலை அவர்கள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 3 சிறுமிகளும் திடீரென மாயமாகினர். இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் சிறுமிகள் கிடைக்கவில்லை. இதனால் கடலூர் முதுநகர் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினார். மேலும் கடலூர் பச்சையாங்குப்பத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். மேலும் சிறுமிகளை உடனடியாக கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார்,

சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுமிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை குறிஞ்சிப்பாடி அருகே உள்ள, ஆடுர் அகரம் பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த 3 சிறுமிகளையும் போலீசார் பத்திரமாக மீட்டு,  அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த மூன்று சிறுமிகளும், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால், விளையாட்டுத்தனமாக குறிஞ்சிப்பாடி செல்லும் பேருந்தில் ஏறி சென்றது விசாரணையில் தெரியவந்தது. மாயமான 3 சிறுமிகளையும் துரிதமாக செயல்பட்டு மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்பி சக்தி கணேசன் பாராட்டினார்.

Related Stories: