வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சங்ககிரி ஜூலை 27: சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, சங்ககிரியில் உள்ள ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு அருகேயுள்ள, சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜவேல் மகன் சீனிவாசன்(18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சீனிவாசன் பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனால், கடந்த 2 மாதத்திற்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ச5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த சிறுமியின் சகோதரியின் கொழுந்தனான சண்முகம்(22) என்பவர் ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி சிறுமியை அழைத்துச் சென்று சங்ககிரியில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இது சிறுமியின் தாய்க்கு தெரியவரவே அவர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். அதில், சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும்  திருமண வயது ஆகவில்லை என தெரிந்தும் தாலிகட்டி குழந்தை திருமணம் செய்த சண்முகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். மேலும், சண்முகம் மீது குழந்தை திருமண சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: