×

தர்மபுரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

தர்மபுரி, ஜூலை 27: சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் 10ம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது. ”நம்ம செஸ் நம்ம பெருமை” என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி, கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெறப்பட்டு, தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி,  தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

இதையொட்டி மாவட்ட கலெக்டர் சாந்தி, மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஒளியேற்றி, தடகள வீரர்களிடம் வழங்கினார். ஒளியேற்றப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தடகள வீரர் ஏந்தி சென்று, பிற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளிடம் வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளும் இணைந்து ஒளியேற்றப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வலம் வந்தனர். மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் ஜோதியை ஒப்படைத்தனர். ஜோதியை பெற்றுக்கொண்ட கலெக்டர், ஒளியேற்றப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை, அனைவரின் பார்வைக்காக காட்சிப்படுத்தினார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் சாந்தி, எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.

தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி ஸ்ரீஹனு வரவேற்பு நடனமும், தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி ஹரிணியின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும், நல்லாம்பட்டியில் உள்ள தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், சிலம்பம் மற்றும் தொங்கும் இழை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதனைதொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க உள்ள 188 நாடுகளின் பெயர்களை நினைவுகூறும் வகையில், 188 நாடுகளின் பெயர்களை கொண்ட பதாகைகள் தாங்கிய மாணவ, மாணவிகளுக்கு 188 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பின்னர் இவ்விளையாட்டு மைதான வளாகத்தில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நினைவு கூறும் வகையில், மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

3 வகையான பிரிவுகளில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டு, இம்மாவட்ட அளவிலான சதுரங்க இப்போட்டிகளில் 3 வகுப்பு பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் மற்றும் 2ம் இடம் பெற்ற மொத்தம் 12 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி பெற்றதற்கான பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஒ அனிதா, சப் கலெக்டர் சித்ரா விஜயன், திட்ட இயக்குநர் (பொ) பாபு, ஏடிஎஸ்பி அண்ணாமலை, முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா, தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், வட்டாட்சியர் ராஜராஜன் மற்றும்  மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா