×

1ம் தேதி துவங்குகிறது மதுரையில் இருந்து திருவாரூர் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி சுடர் ஓட்டத்திற்கு வரவேற்பு

திருவாரூர், ஜூலை 27: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மதுரையில் இருந்து திருவாரூருக்கு வந்த ஜோதி சுடருக்கு எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (28ம்தேதி) துவங்குகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாநில முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில சைக்கிள் பேரணி, வாகன பேரணி, கோல போட்டி, மினி மாரத்தான் ஓட்டம், பள்ளி மாணவர்களுக்கிடையே போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செஸ் போட்டியினையொட்டி ஜோதி சுடர் ஓட்டம் மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் இந்த ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

இதற்கான ஜோதி சுடரை நேற்று முன்தினம் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடமிருந்து திருவாரூர் மாவட்ட டிஆர்ஓ சிதம்பரம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகவேந்தன் பெற்று வந்த நிலையில் நேற்று காலை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியிலிருந்து ஜோதி சுடர் ஓட்டத்தை டிஆர்ஓ சிதம்பரம் துவக்கி வைத்தார். இதில் உலக செஸ் போட்டியாளரான திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஹர்ஷினி தலைமையில் மாணவ, மாணவிகள் இந்த ஜோதி சுடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் இருந்து பின்லே மேல்நிலைப்பள்ளி வரை இந்த சுடர் ஓட்டமானது நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று பின்னர் திருவாரூர் வருகை தந்தது.

அங்கு நகராட்சி அலுவலகம் முன்பாக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் இந்த ஜோதி சுடர் ஓட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆர்டிஓ சங்கீதா, நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், கமிஷனர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகவேந்தன், மாவட்ட தடகள சங்க செயலாளர் தியாக பாரி, கால்பந்து கழக துணை தலைவர் சீலன், கூடைப்பந்து கழக தலைவர் பன்னீர்செல்வம், சதுரங்க கழக செயலாளர் பால குணசேகரன், துணைத் தலைவர் முரளிதரன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஜோதி சுடர் ஓட்டமானது திருவாரூர் மனுநீதி சோழன் கல்தேர் மண்டபம் வரையில் சென்று முடிவுற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி ஆகிய ஊர்களில் இந்த ஜோதிசுடர் ஓட்டமானது நடைபெற்ற நிலையில் இறுதியாக மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை சென்றடைந்து முடிவற்றது. அங்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Chess Olympiad ,Madurai ,Tiruvarur ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...