×

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான உரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது; இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 216.50 மி.மீ.க்கு பதிலாக 275.77 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 59.27 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது. பயிர் சாகுபடியை பொருத்தவரை 2022-2023ம் ஆண்டில் ஜுன் மாதம் முடிய நெல் 5173 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 382 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 235 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 1496 எக்டர் பரப்பிலும், கரும்பு 113 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 31 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 11968 எக்டர் பரப்பளவிலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

பயிர்ச் சேதத்தை பொருத்தவரை டிசம்பர் 30 முதல் ஜனவரி 02 வரை பெய்த கனமழையால் பாதிப்படைந்த 1339.705 எக்டர் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த 50.115 எக்டர் எள் பயிர்களுக்கும், நிவாரணத் தொகை வேண்டி சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த 492 எக்டர் நெல் பயிர்களுக்கு 876 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.66,32,556 வரவு வைக்கப்பட்டுள்ளது. இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 227.721 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 25.545 மெ.டன் பயறு விதைகளும், 45.497 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.040 மெ.டன் சிறுதானிய விதைகளும், 1.375 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன.

உர இருப்பை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜூலை 2022 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 1750 மெ.டன்களுக்கு, இதுவரை 974 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 342 மெ.டன்களுக்கு 98 மெ.டன் வரப்பெற்றுள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 1140 மெ.டன்களுக்கு இதுவரை 328 மெ.டன் பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 2347 மெ.டன்னும், டிஏபி 1011 மெ.டன்னும், பொட்டாஷ் 904 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 3348 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 231 மெ.டன் யூரியா, 475 மெ.டன் டிஏபி, 376 மெ.டன் பொட்டாஷ், 1153 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். 2021-22ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 67 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-23ம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய்ப் பனை மற்றும் தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்து கொடுக்கப்படுகின்றன. 2022-23ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 363 பயனாளிகளுக்கு 411 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 கோடியே 38 லட்சம் 81 ஆயிரம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Pudukottai district ,
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை