×

பெரம்பலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு கலை நிகழ்ச்சியுடன் வரவேற்பு

பெரம்பலூர்,ஜூலை 27: பெரம்பலூர் மாவட்ட \”செஸ் ஒலிம்பியாட் ஜோதி\” மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்பட்டது. மேலும் சதுரங்க அட்டை வடிவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு சந்திப்பில் தொடங்கி, அமோனைட்ஸ் மையம் வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, சங்குபேட்டை வழியாக தாலுகா அலுவலகத்தில் உள்ள அமோனைட்ஸ் மையத்திற்கு வந்து நிறைவு பெற்றது. பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 கிலோ எடையில் “நம்ம செஸ் நம்ம பெருமை” என்ற வாசகம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வெட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமோனைட்ஸ் மையத்தில் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்ட 12 ஓவிய ஆசிரியர்களும், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த 12 ஆசிரியர்களும் என மொத்தம் 24 ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெரம்பலூர் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி ஆகியோர் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலச்சினை அச்சிடப்பட்ட மஞ்சப்பை மற்றும் 187 நாடுகள் பங்கேற்கும் சதுரங்கப் போட்டி நிகழ்வை நினைவு கூறும் வகையில் 187 மரக்கன்றுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மாணவ, மாணவிகள் பங்குபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சி, பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட எஸ்பி மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏடிஎஸ்பி மதியழகன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஒன்றிய குழு தலைவர்கள் மீனா அண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, பெரம்பலூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கணபதி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur District ,Chess Olympiad ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...