×

கரூர் மாவட்டத்தில் திறந்த வெளி பார்களால் விவசாய நிலங்கள் பாதிப்பு

கரூர், ஜூலை27: திறந்த வெளி பார்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் முழுதும் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. மாநகர பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பெரும்பாலும் பார்கள் கடையின் அருகிலேயே செயல்படுகிறது. மாநகர பகுதிகளிலும் பெரும்பாலான கடைகளில் பார்கள் செயல்படுகிறது. மாலை நேரமானதும் டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள், மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, பார்களுக்கு செல்லாமல், விவசாய நிலங்களில் அமர்ந்து ஹாயாக குடித்து விட்டு, மதுபாட்டில், பிளாஸ்டிக் கப் போன்றவற்றை அப்படியே விவசாய நிலங்களில் தூக்கி எறிந்து விட்டு செல்கின்றனர்.

மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளின் அருகே இதுபோன்ற செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தூக்கி எறியப்படும் பாட்டில்கள் உடைந்து, கால்நடைகளை காயப்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்கள் மக்கி நிலத்தின் தன்மை மாறுவது போன்ற பல்வேறு சீர்கேடுகள் என இதுபோன்ற நிகழ்வுகள் தினமும் நடைபெற்று வருகிறது.சில சமயங்களில் பகல் நேரங்களில் கூட குடி மகன்கள் சாலையோரம் அமர்ந்து குடிப்பதால், வேலை முடித்து செல்லும் பெண்களும் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாய நிலங்கள் மற்றும் விளை நிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை கண்காணித்து அதனை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்