×

ரேஷன் கடை பூட்டை உடைத்து 100 மூட்டை சர்க்கரை பருப்பு, அரிசி கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

திருவொற்றியூர், ஜூலை 27: திருவொற்றியூர் அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 100 மூட்டை சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பூரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் கடை ஊழியர் அம்பேத்கர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் கடையை மூடிவிட்டு சென்றார்.

 நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடை பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் மொத்தமும் திருடப்பட்டு, கடை காலியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே இதுபற்றி பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து ரேஷன் கடையை சோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் யாரோ லாரியை கொண்டு வந்து ரேஷன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் 100 மூட்டை அளவிலான சர்க்கரை, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தற்போது கொசப்பூர் பகுதியில் அங்குள்ள நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டு வருவதால் கடந்த 2 தினங்களாக அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் போலீசார் இருக்கின்ற இந்த சூழலில் லாரியை கொண்டு வந்து ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த கடையில் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் இந்த ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை தங்கு தடை இல்லாமல் கொடுக்க  வேண்டும் என்று அலுவலர்களை எச்சரித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Asamis ,
× RELATED தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட...