×

வெளிநாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் புதுப்பொலிவு பெறும் மெரினா கடற்கரை: களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்

சென்னை, ஜூலை 27: வெளிநாடுகளே திரும்பி பார்க்கும் வகையில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதற்கான புதிய திட்டங்களை சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்காள விரிகுடா கடலில் பரந்து விரிந்து காணப்படும் மெரினா கடற்கரை, இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாக திகழ்கிறது. இதை சென்னையின் அடையாளங்களில் ஒன்று என்றே கூறலாம். வடக்கு பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. நீளம் கொண்ட இயற்கையான கடற்கரையாக உள்ளது.

 சென்னையின் பொழுது போக்கு தலமாக திகழும் மெரினா கடற்கரை, மக்களை கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து பொழுதை கழித்து செல்வார்கள். மேலும் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதற்கான இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது. இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகளும் சென்னை மக்களும் நிறைந்த இடமாக மெரினா கடற்கரை காட்சியளிக்கிறது.

 சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் நடைபயிற்சி என்பது எல்லாருக்கும் ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். மாலையில் இந்த கடற்கரையில் கலைப்பொருட்கள் விற்பனை, கைவினை பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விற்பனையுடன் பல கடைகள் அமைந்திருக்கும். குழந்தைகள் விளையாட சிறந்த இடமாகவும் உள்ளது.
  இப்படிப்பட்ட மெரினா கடற்கரையை வெளிநாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் புதுப்பொலிவுடன் ஜொலிக்க செய்வதற்கான திட்டத்தை சென்னை மாநராட்சி கையில் எடுத்துள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. அதிமுக அரசு புறக்கணித்த சிங்கார சென்னை திட்டம், திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும்  புதுப்பொலிவுடன் ‘சிங்கார சென்னை 2.0’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை  மேயராக பதவி வகித்த காலத்தில் ‘சிங்கார சென்னை’ திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் சென்னையை வெளிநாடுகளுக்கு இணையாக மாற்ற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது.  அதன் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், திமுகவின் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டத்தை வேகமாக செயல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னை மாநகரமே வெளிநாடுகளுக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் சென்னையின் அடையாளமாக திகழும் மெரினா கடற்கரையும் வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

 அதன்படி, மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மெரினா கண்ணகி சிலை, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா சமாதிகள், உழைப்பாளர் சிலை, காந்தி சிலை என்று பல சிலைகள், செயற்கை நீரூற்று, அலங்கார கற்கள் என்று பல அமைப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு இருக்கும் செயற்கை நீரூற்று சமீபத்தில் தான் சீரமைக்கப்பட்டது. அங்கு இரவில் ஜொலிக்கும் வகையில் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கல் அலங்கார அமைப்புகளும் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில் தான் மெரினாவில் 6 கிமீ சாலை பகுதியை புதிதாக அலங்காரம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இங்கு புதிய அலங்கார அமைப்புகள், கண்கவர் அமைப்புகள், புதிய விளக்கு அமைப்புகள், சிறிய அளவிலான பார்க்குகள், உணவகங்களை வைக்க வசதி என்று பல ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக மாநகராட்சி பல்வேறு துறை நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெரினாவில் புதிய அலங்கார அமைப்புகள், கண்கவர்  அமைப்புகள், புதிய விளக்கு அமைப்புகள், சிறிய அளவிலான பார்க்குகள்,  உணவகங்களை வைக்க வசதி என்று பல ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளனர்.

மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவாறே பார்த்து ரசிக்கும் வகையில் ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இன்ஜினீயர்கள் ஆலோசனை நடத்தி வியூகம் வகுத்து வருகின்றனர். முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து ‘நம்ம சென்னை’ செல்பி பாயின்ட் வரையிலான 3 கி.மீ. தூரத்துக்கு ‘ரோப் கார்’ வசதி கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடைகளுக்கு கூடுதல் நிதி
ஏற்கனவே மெரினாவில் இருக்கும் கடைகள் பயன்படுத்துவதற்காக சிறிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை இன்னும் சாலையோர கடைக்காரர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர்.  ஸ்மார்ட் புஷ் அமைப்பு கொண்ட தள்ளு வண்டிகள் வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை விரைவில் கடைக்காரர்கள் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ₹29 கோடி இல்லாமல் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு துறை ஆலோசனை
அதன்படி நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில்  துறை என்று பல அதிகாரிகளுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்த சாலை பகுதிகளில் முக்கியமான அரசு கட்டிடங்கள், அதேபோல் சமாதிகள் உள்ளன. இதனால் எந்த தவறும் நேராமல் புதிய அலங்காரங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் கடற்கரைகளை மிஞ்சும் அளவிற்கு வித்தியாசமான அலங்காரங்களை செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags : Marina Beach ,
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...