ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஏபிடிஓவிடம் மனு

சின்னமனூர், ஜூலை 27: சின்னமனூர் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கக்கோரி, ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் மனு அளித்தனர். சின்னமனூர் அருகே அழகாபுரி ஊராட்சி கிராமம் உள்ளது. இங்குள்ள மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆட்டோ நிறுத்துவதற்கு சரிவர இடம் ஒதுக்கி தரப்படாததால் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அபிபட்டி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணியிடம் நேரில் மனு அளித்தனர். மனுவில், ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு ஆட்டோவை மட்டும் நிறுத்திக் கொண்டு வருகின்ற பயணிகளை ஏற்றி இறக்கி விடுகிறோம். எனவே ஆட்டோக்களை நிறுத்துவதற்கு ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இடத்தை அளவீடு செய்து கிராம அதிகாரி மற்றும் தாசில்தாரிடம் அனுமதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories: