×

சிவகங்கை-தொண்டி சாலையோர வளைவுகளில் தடுப்புகள் வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 27:  சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை உயரமாகவும், அபாயகரமான வளைவுகளும் இருக்கும் இடங்களில் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை, தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு கடந்த 2012ல் முதற்கட்டமாக திருப்புவனம் அருகிலிருந்து காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி வரையிலும், கடந்த 2013ல் ஆண்டிச்சியூரணியில் இருந்து, தொண்டி வரை சாலைபோடும் பணி நடந்து முடிந்தது. சாலையின் இருபுறமும் மேலும் தலா 1.5 மீட்டருக்கு அகலப்படுத்தப்படும் பணி 2015ம் ஆண்டு நடந்தது. இதில் ஏற்கனவே இருந்த சாலை முற்றிலுமாக அகற்றப்பட்டு அதன் மீது மண், கற்கள், கான்க்ரீட் கலவை போடப்பட்டு உயரப்படுத்தப்பட்டது.

சிவகங்கையிலிருந்து, சருகணி வரை உள்ள சாலையில் பல இடங்களில் தரையிலிருந்து சாலை சுமார் 5அடி முதல் 8அடிக்கு மேல் உயரமாக காணப்படுகிறது. சாலை விரிவாக்க பணியின்போது சிவகங்கையிலிருந்து சருகணி வரை பல்வேறு இடங்களில் உள்ள அபாயகரமான வளைவுகளை அகற்றி சாலைகளை நேராக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவ்வாறு செய்யப்பட வில்லை. கண்டனிப்பட்டி கண்மாய் வளைவு, காட்டுக்குடியிருப்பு அருகே உள்ள நவ்வாக்கண்மாய் வளைவு, பையூர் அரைக்காசு காளியம்மன் கோவில் அருகே உள்ள வளைவு, கண்டனிப்பட்டி கண்மாய் வளைவு உள்ளிட்ட பல்வேறு சாலை வளைவுகள் சரி செய்யப்படவில்லை.

இந்த வளைவுகள் அபாயகரமானதாகும். இந்த வளைவுகளில் சாலை தரைத்தளத்தை விட பல அடி உயரமாக காணப்படுகிறது. நவ்வாக்கண்மாய் வளைவில் சாலைக்கும், தரைக்குமான உயரம் சுமார் 8அடி உள்ளது. வளைவுகளில் சிறிது கட்டுபாட்டை இழந்தாலும் பள்ளத்திற்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் லாரி, வேன், கார், டூவீலர் என அனைத்து வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. இந்த வளைவுகளில் சாலையோரத்தில் கம்பி தடுப்புகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:மதுரை,தொண்டி சாலை விரிவாக்க பணியின்போது வளைவுகளை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த விபத்துகளை கணக்கில் கொண்டு வளைவுகளை அகற்றியிருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் உயிர்ச்சேதத்தை தடுக்கும் வகையில் வளைவுகள் உள்ள தூரத்திற்கு கம்பி தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும். சருகணி, தேவகோட்டை சாலையில் பல வளைவுகளில் இதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கை, தொண்டி சாலையில் ஒரு வளைவில் கூட தடுப்புகள் அமைக்கப்பட வில்லை. இந்த சாலையில் புதிததாக வருபவர்கள் திடீரென வரும் இந்த வளைவுகளை எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வாகனங்கள் பள்ளத்துக்குள் கவிழ்கிறது. எனவே வளைவுகளை அகற்றவோ அல்லது தடுப்புகள் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sivagangai-Thondi ,
× RELATED சிவகங்கை- தொண்டி சாலையோர வளைவுகளில்...