×

விதைச்சட்டங்களை மீறினால் விற்பனையாளர் மீது நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

சிவகங்கை, ஜூலை 27: விதைச் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: விதை விற்பனையாளர்கள் தங்களது கடையில் கண்டிப்பாக விதை இருப்பு விவர பலகை மற்றும் விலை விவரப்பட்டியல் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையில் படும்படி வைத்து பராமரிக்க வேண்டும். மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விதைகள் வாங்கும் போது, அதற்குரிய படிவம் 2ஐ பெற வேண்டும். மேலும் சான்று பெற்ற விதைகளின் கொள்கலன்களில் சீலிடப்பட்ட ஈய வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும்.

விதை விவர அட்டையில் பயிர், ரகம், குறைந்தபட்ச முளைப்புத்திறன் சதவீதம், விதைத் தூய்மை சதவீதம், இனத்தூய்மை சதவீதம், சோதனை நாள், காலாவதி தேதி, பரிந்துரைக்கப்படும் பருவகாலம், விதைப்புக்கு ஏற்ற பகுதி முதலிய விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆதார விதைகள் வெண்மை நிறச்சான்று அட்டையுடனும், சான்று விதைகள் நீல நிறச் சான்று அட்டையுடனும் உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களால் ஆராய்ச்சிகள் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும், பயிர் ரகங்கள் கண்டிப்பாக கோவை விதைச்சான்று இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு விற்பனை செய்யப்பட வேண்டும்.

விதை விற்பனையாளர்கள் பதிவுச் சான்றை சரி பார்த்து அதன் பிறகே தனியார் பயிர் ரக விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது சம்பந்தப்பட்ட பயிர் ரகத்தின் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, விலைப்பட்டியல் உடனுக்குடன் வழங்க வேண்டும். இதை பின்பற்றத் தவறும் பட்சத்தில் விதைச்சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Deputy Director ,Seed Inspection ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...