ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி அறப்போராட்டம்

திண்டுக்கல், ஜூலை 27:  திண்டுக்கல்லில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை வழக்கில் அமலாக்கத்துறை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது விசாரணை நடத்தி வருவதை கண்டித்து திண்டுக்கல் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். அறப்போராட்டத்தில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை வழக்கில் அமலாக்கத்துறை ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது விசாரணை நடத்தி வருவதை கண்டித்தும் உணவுப் பொருட்களின் மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கைவிடக் கோரியும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.

இந்த அறப்போராட்டத்தில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாவட்டத் துணைத் தலைவர் மச்சக்காளை, காங்கிரஸ் நிர்வாகிகள் அலியார், மதுரை வீரன், ரோஜா பேகம், பொட்டு செல்வம், ரகுமான், நாகலட்சுமி, பிரைட் நசீர் காஜாமைதீன், ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: