நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை வைகை அணைக்கு நீர்மட்டம் உயர வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, ஜூன் 25: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வந்தது. கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதனால், நீர்வரத்து இல்லாமல் இருந்த வைகை அணைக்கு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் உயருவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தற்போது 710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அணையின் நீர்மட்டம் 54.66 அடியாகவும், அணையில் இருந்து 869 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கு 286 கனஅடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: