தேனி மாவட்டத்தில் பழுதான 760 மின்கம்பங்களை மாற்றும் பணி ஜூலை 15க்குள் நிறைவு பெறும்

தேனி, ஜூன் 25:தேனி மாவட்டத்தில் தேனியை தலைமை கோட்டமாக கொண்ட மின்வாரியத்தில் தேனி, பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட மூன்று உபகோட்டங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்களில் பழுதடைந்த மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதன்படி, தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 760 மின்கம்பங்கள் உடனடியாக மாற்றி அமைக்கும் வகையில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இதனை சுமார் ரூ.40 லட்சம் செலவில் மாற்றி புதுமின்கம்பங்கள் அமைக்க மின்வாரியத்துறை முடிவு செய்தது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் 760 மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி தேனி மாவட்ட மின்வார வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில் முதன்மை பொறியாளர் பிரகலாதன் முன்னிலையில் நடந்து வருகிறது. இதில், தேனியில் மட்டும் 58 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி உதவி மின்பொறியாளர் தங்கப்பாண்டி மேற்பார்வையில் நடந்து வருகிறது. இப்பணிகள் வருகிற ஜூலை 15ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

Related Stories: