எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி முதல்வர் ஆட்சி நடத்துகிறார்: நகர்மன்ற தலைவர் பேச்சு

காரைக்குடி, ஜூன் 25: காரைக்குடி செஞ்சை செங்குட்டுவன் பகுதியில் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சத்தில் மகப்பேறு மையம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. முதுநிலை ஒப்பந்தகாரர் பொறியாளர் செந்தில் குமார் வரவேற்றார்.

நகர்மன்ற தலைவர் முத்துத்துரை கட்டிட பணியை துவக்கி வைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். அனைத்து துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். குறிப்பாக சுகாதாரத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் 4 இடங்களில் மகப்பேறு மையங்கள் கட்டப்பட உள்ளது. கணேசபுரம் மற்றும் முத்துபட்டணத்தில் தலா ரூ.25 லட்சத்தில் மகப்பேறு மையங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

தற்போது ரூ.75 லட்சத்தில் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சீமா, நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், பூமிநாதன், தனம் சிங்கமுத்து, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, டாக்டர் கார்த்திகேயன், மின்கம்பியாளர் வெற்றிவேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சேவுகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன், வைரவன், வட்ட பிரதிநிதி மெய்யப்பன், வட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: