சாலைக்கிராமம் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

இளையான்குடி, ஜூன் 25: சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேஷனில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடியில் மொத்தம் 55 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளது.   இரண்டாக பிரித்து, 28 ஊராட்சிகள் இளையான்குடி போலீஸ் ஸ்டேசன் கட்டுப்பாட்டிலும், 27 ஊராட்சிகள் சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேசன் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஆரம்ப காலத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேசன், தற்போது போதிய போலீசார்  இல்லாமல் சிரமப்பட்டு வருகிறது. சுமார் 20 போலீசார் இருக்க வேண்டிய பணியில், தற்போது 11 போலீசார் மட்டுமே உள்ளனர்.

இதில் 5 பேர் பெண் போலீஸ். இது தவிர கோர்ட், அலுவல், ஸ்டேசன் என பணி ஒதுக்கப்படுகிறது. அதனால் இரவு ரோந்து மற்றும் இரவு காவல் பணிகளில் சிரமம் ஏற்படுகிறது. ஒரே போலீசார் அதே பணியில் தொடர்ந்து ஈடுபடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் காலி பணியிடத்தை நிரப்ப ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணிபுரிவதால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்  திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் தொடர்புடையவர்கள்  இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேசனில், கூடுதல் போலீசார் நியமிக்க எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: