×

கோஷ்டி மோதலில் தாக்குதல் தனியார் நிறுவன ஊழியர் உட்பட 3 பேருக்கு கத்திக்குத்து

கோவை, ஜூன் 25: கோவையில் கோஷ்டி மோதலில் தனியார் ஊழியரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் எம்என்ஜி தெருவை சேர்ந்தவர் அஸ்வின்(19). இவர், சாயிபாபா காலனியில் உள்ள மார்க்கெட்டிங் ஏஜென்சியில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஹரி(20). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்னையில் ஹரியை வாலிபர்கள் சிலர் தாக்கினர். இது தொடர்பாக ஹரி தனது நண்பர் அஸ்வினிடம் தெரிவித்தார். இதனையடுத்து அஸ்வின் தனது நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோருடன் சென்று ஹரியை தாக்கிய நபர்களை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அஸ்வின் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். கத்தியால் குத்தியதில், அஸ்வின், பிரகாஷ், சந்தோசுக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர், அந்த கும்பல் 3 பேரையும் மிரட்டி விட்டு சென்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக, கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். 3 பேரை கத்தியால் குத்தியது கோவை சலீவன் தெருவை சேர்ந்த யுவராஜ் (18), காந்திபார்க்கை சேர்ந்த நிர்மல்குமார் (23) பிரமோத் (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் யுவராஜ், நிர்மல்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரமோத்தை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Koshti conflict ,
× RELATED கோஷ்டி மோதலால் கோட்டை விட்ட கெலாட்