மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகம் வரும்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி

திருச்சி, ஜூன் 25: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போது கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். இதில் டிஆர்ஓ அபிராமி, வேளாண் இணை இயக்குநர் முருகேசன், வேளாண் நேர்முக உதவியாளர் மல்லிகா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், வறட்சியின் காரணமாக 2021ம் ஆண்டு அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி ஆனது. ஆனால் மத்திய காலக்கடன் தள்ளுபடி ஆகவில்லை. குறுகிய கால கடனை மத்திய கால கடனாக மாற்றிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டும். அதிக மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கிட வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலைக்கு 6 மாதத்திற்கு முன்பு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைக்க உதவிட வேண்டும். மருதாண்டங்குறிச்சி வாய்க்காலை தூர்வார வேண்டும்.

அனைத்து சொசைட்டிகளிலும் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவை முட்களை அகற்றிட வேண்டும் என்றார். இதே போல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட பிரதமர் மோடி அனுமதித்தால், அவர் தமிழகத்திற்கு வரும்போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம். தேர்தலின்போது பாஜவிற்கு விவசாயிகள் ஓட்டு போட மாட்டோம் என்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், இதற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகம் ஏராளமான விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஒன்றிய அரசு, கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: