குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

கரூர், ஜூன் 25: தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு “எல்லாருக்கும் எல்லாம்” தமிழக முதல்வரின் பொக்கிஷம் என்ற தலைப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று காலை கரூர் நகர ஆரம்ப சுகாதார (கஸ்தூரிபாய் தாய் சேய் நலமையத்தில்) நடைபெற்றது. தமிழகத்தில் கடந்தாண்டு மே 7ம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகம் முழுதும் மக்களை தேடி மருத்துவம் உட்பட பல்வேறு திட்டங்கள் தேர்தல் சமயத்தில் அறிவித்தது மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலனை மட்டுமே முக்கிய நோக்கமாக கருதி தமிழகம் முழுதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேலை தேடுவோர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் மாவட்ட நிர்வாகமே பாலமாக நின்று செயல்படும் வகையில் பாலம் திட்டம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரூரை நோக்கி பணிக்கு வரும் பெண்களின் நிலையை கவனத்தில் கொண்டு, அவர்களின் இருப்பிடத்தின் அருகிலேயே சிறு, குறு தொழில்கள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்துள்ள உணவுகள், அதுவும் இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், நேற்று கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நலவிடுதியில் ஊட்டசத்து பெட்டகம் (பொக்கிஷம்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உட்பட அனைத்து அதிகாரிகளும், திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அரசின் இந்த சிறப்பான பொக்கிஷம் பெட்டகம் வழங்கும் நிகழ்வை அனைத்து கர்ப்பிணி பெண்களும், இவர்களின் உறவினர்களும், நண்பர்களும் என வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவி குழு தயாரிப்பு

பொக்கிஷம் பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் அடங்கிய துணிப்பை கரூர் மாவட்டம் அஞ்சூரில் உள்ள ஜெயம் ஒத்த தொழில் குழுவினர்களும், இதில் உள்ள லட்டுக்களை அம்மாபட்டி முத்தாலம்மன் மகளிர் சுய உதவிக்குழுவினர்களும், முறுக்கு வகைகளை, ராஜேந்திரம் புயல் மகளிர் சுய உதவிக்குழுவினர்களும், கடலை மிட்டாய்களை, மண்மங்கலம் புன்னகை மகளிர் சுய உதவிக்குழுவினர்களும், முருங்கை இலை சூப் பவுடரை, ஈசநத்தம் சாமந்திப்பூ மகளிர் சுய உதவிக்குழுவினர்களும் தயாரித்துள்ளனர். மேலும், கூடுதல் பொருட்களான பேரிச்சம் பழத்தை, கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, நெய் மற்றும் பாதாம் படவுர் ஆகியவற்றை கரூர் ஆவின் நிறுவனம் தங்கள் பொறுப்பில் எடுத்து வழங்கி உள்ளனர்.

Related Stories: