அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

வேதாரண்யம், ஜூன் 25: வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி விட்டதால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் அளிக்கப்படுகிறது. பல வீடுகளில் விதிகளுக்கு புறம்பாக தரை மட்ட தொட்டியில் இணைப்பு கொடுத்தல் மற்றும் மின் மோட்டார் மூலம் ஆகிய சட்ட புறம்பான முறையில் குடிநீர் உறிஞ்சி வருகின்றனர். இதனால் பேரூராட்சியில் பல பகுதிகளுக்கு சரியான முறையில் குடிநீர் செல்வதில்லை. பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைஞாயிறு பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் செல்ல வீட்டு இணைப்புகளை ஆய்வு செய்து பார்வையில் படும்படி மாற்றி அமைத்து அரை இன்ச் திருகு டேப் பொருத்த செயல் அலுவலர் குகன் உத்தரவிட்டிருந்தார். பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து அதிரடியாக பொக்லேன் இயந்திரம் கொண்டு குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி வருகின்றனர். நேற்று இரண்டாம் நாளாக பணி நடைபெற்ற போது மேலத்தெரு பகுதி மக்கள் பொக்லேன் இயந்திரம் வெட்டிய குழிக்குள் இறங்கி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எனவே நேற்று பணிகள் நடைபெற வில்லை. காவல் துறை பாதுகாப்பு பெற்று பணிகள் தொடரும் என செயல் அலுவலர் தெரிவித்தார். தலைஞாயிறு பேரூராட்சி குடிநீர் திட்ட உப விதிகளின் படி செயல் அலுவலர் தெரிவிக்கும் வகையில் தான் வீட்டுக்கு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் சீராக செல்ல இணைப்பை முறைப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க கேட்டுள்ளார்.

அவ்வாறு குடிநீர் இணைப்பு முறைப்படுத்த ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் குடிநீர் இணைப்பு முன்னறிவிப்பு இன்றி துண்டிக்கப்படும் என் செயல் அலுவலர் குகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேரூராட்சி பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: