×

நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் சப்பரபவனி

கேடிசி நகர், ஜூன் 25: நெல்லை சந்திப்பு உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் நேற்று சப்பர பவனி நடந்தது. நெல்லை சந்திப்பு உடையார்பட்டி இருதயநகர் திருஇருதய ஆண்டவர் திருத்தல மாணிக்க ஆண்டு விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியேற்றினார். விழா நாட்களில் கலைநிகழ்ச்சிகள், மறையுரை சிந்தனை, நற்கருணை பவனி ஆகியவை நடந்தது. நேற்று (24ம் தேதி) திருஇருதய திருவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமை வகித்தார்.

கோவில்பட்டி மறைமாவட்ட அதிபர் மோட்சராஜன் முன்னிலை வகித்தார். குருவிகுளம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி மறையுரை வழங்கினார். விழாவை யொட்டி இரவு 9 மணியளவில் சப்பர பவனி துவங்கியது. திருஇருதய ஆலய பங்கு சப்பரம் மற்றும் கிளை பங்குகளை சேர்ந்த 5 சப்பரங்கள் இந்த பவனியில் இடம் பெற்றன. சப்பர பவனி உடையார்பட்டி மெயின்ரோடு, பைபாஸ் ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மைக்கேல்ராசு, சரணாலய இயக்குநர் ஞானதினகரன், புனித சூசையப்பர் தொழில் முனைவோர் சங்கம் மற்றும் இருதய இளைஞர் இயக்கத்தினர் செய்திருந்தனர். விழாவில் இன்று மாலை 6 மணிக்கு மாணிக்க ஆண்டுவிழா, புதுநன்மை விழா மற்றும் குடும்ப விழா நடக்கிறது. இதில் பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி பங்கேற்கிறார்.

Tags : Nellai Udayarpatti Thiruiruthaya Temple Correctional Gem Annual Ceremony Sapparapavani ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு