×

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

குலசேகரம், ஜூன் 25: திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குமரி மாவட்டம் திருவட்டாரில் அமைந்துள்ள ஆதிகேசவபெருமாள் கோயிலில்,  சுமார் 418 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் ஜூலை 6ம் தேதி நடக்கிறது. வருகிற 29ம்தேதி கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் தொடங்குகின்றன. அன்று காலை 5 மணிக்கு மிருத்யுஞ்கய ஹோமம், பஞ்ச புண்ணியாகம் நடக்கின்றன.

காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு, ஆச்சாரிய வரணம், முளையிடல், பிரசாத சுத்தி, அஸ்த்ர கலச பூஜை, வாஸ்து, கலச ஹோமம், வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து பலி, வாஸ்து புண்யாகம், அத்தாழ பூஜை ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து 5ம்தேதி வரை யாக பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் நடக்கின்றன. வரும் 6ம்தேதி அதிகாலை 3.30க்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை உள்ளிட்டவை நடக்கின்றன. காலை 5.10 மணி முதல் காலை 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் காலை 6.50 மணிக்குள் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.

காலை 11 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.  தொடர்ந்து 7ம்தேதி, 8ம் தேதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 29ம் தேதி முதல் தினமும் இரவில் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், மோகினியாட்டம், பக்தி பஜனை உள்ளிட்டவையும் நடக்கின்றன. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., அரசு முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், அறநிலையத்துறை கூடுதல்  ஆணையர்கள் திருமகள், கவிதா, ஹரிப்பிரியா, சுதர்சன், ஜெயராம், எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா மற்றும் முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இணை ஆணையர் ஞானசேகரன், கவிதா பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Tags : Thiruvattar Adigesavaperumal Temple ,
× RELATED திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் இன்று கொடிமரம் பிரதிஷ்டை