சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்

சென்னை: சென்னை மாநகரில் இயக்குவதற்கு 100 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் கோரியுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு சார்ஜ் வசதியுடன் இணைந்து பேருந்துகளை வழங்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஐஆர்டி ஏலம் கோரியுள்ளது.

டெண்டர் ஆவணங்களின்படி, இந்த பஸ்கள் அனைத்தும் சக்கர நாற்காலியில் செல்லும் பயணிகளுக்கு ஒன்று உள்பட 36 பேர் இருக்கை வசதியுடன் கூடிய ஏசி பஸ்களாக இருக்க வேண்டும். ஏலதாரர்கள் தரையின் உயரத்தை 400 மில்லி மீட்டருக்கும் குறைவாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் பயணிகள் எளிதாக பேருந்துகளில் ஏறி இறங்கலாம். சக்கர நாற்காலியுடன் பயணிப்ேபாரின் வசதிக்காக அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகையில், ‘டெல்லி, மும்பை மற்றும் புனேவை தொடர்ந்து மின்சார பஸ்களை இயக்கும் பெருநகரங்களில் சென்னையும் இணைந்துள்ளது. மாநில அரசு இந்த செயல்முறையை மேலும் தாமதப்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினர்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர், ‘சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு மேலும் 400 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான முன்னோட்டமாக தற்போதைய கொள்முதல் அமையும். ஆரம்ப செயல்பாட்டு வெளியீட்டின் வெற்றியின் அடிப்படையில் மொத்த கொள்முதல் 2024க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜிங் உள்கட்டமைப்பை பொறுத்தவரை ஒரே இரவில் முழுவதும் சார்ஜ் செய்தல் அல்லது ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் 10-30 நிமிடங்கள் சார்ஜ் செய்தல் என்ற இரண்டு மாடல்களில் எதை தேர்வு செய்வது என இன்னும் இறுதி செய்யவில்லை. ஏல மதிப்பீட்டிற்கு பின் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: