குடிநீர் வாரிய வளாகத்தில் தீ விபத்து

பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் கண் எரிச்சலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கொடுங்கையூரில் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான சுமார் 350 ஏக்கர் பரப்பளவிலான காலி மைதானம் உள்ளது. இங்கு, முளைத்துள்ள  கோரை புற்கள் வெயிலில் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது. இந்த கோரை புற்களில் நேற்று மதியம்  ஒரு பகுதியில் திடீரென பற்றிய தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவி கொழுந்துவிட்டு பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் அனல் காரணமாக அப்பகுதி வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

அதோடு, தீப்பொறிகள் காற்றின் வேகத்தால் நாற்புறமும் பரவத்தொடங்கியது இதனால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர் மேலும் அப்பகுதியில் புகைமூட்டம் அதிகரித்ததால் லேசான மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்று கோரை புற்கள் முளைத்து காய்ந்து சருகாக உள்ளதால் அவ்வப்போது இது போன்ற தீ விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் காலி மைதானங்களில்  உள்ள கோரை புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: