×

மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு

கன்னியாகுமரி, ஜூன் 14: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் வழி வலை விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில்  கிழக்கு கடலோர பகுதிகளில் தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களில் இந்த தடை அமுலில் உள்ளது.  இந்த தடைக்காலத்தையொட்டி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், துறைமுகத்தின் கரையோர பகுதிகளில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்த தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த தடைக்காலத்தில் படகுகள் பராமரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பராமரிப்பு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் 61 நாட்கள் தடை காலம் இன்று (14ம்தேதி) முடிவடைகிறது. நாளை (15ம்தேதி) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். இதற்காக வலைகள் பராமரிப்பு, விசைப்படகுகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்வதால், சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் மீண்டும் களை கட்ட தொடங்கும். மீன்கள் வரத்தும் அதிகரிக்கும் என மீனவர்கள் கூறி உள்ளனர்.

Tags : Tsunami ,
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...