தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்

தர்மபுரி, ஜூன் 14: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்பட்டதை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் 1,615 அரசு மற்றும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல்நாளான நேற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், அரசின் கல்விக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பாடப்புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என கல்வி அதிகாரிகள், நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாணவிகளுக்கு பாடப்புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதா? என ஆய்வு செய்தார்.

தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் ராஜகோபால், சோலைக்கொட்டாய் அரசு பள்ளியிலும், பாலக்கோடு கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி, பாலக்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரூர் கல்வி மாவட்ட அலுவலர் ரவி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளிகளிலும் பாடபுத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதே போல், வட்டார கல்வி அலுவலர்கள் அந்தந்த இடங்களில் ஆய்வு செய்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை வழங்கினர். இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறுகையில், ‘தமிழக அரசின் இலவச பாடநூல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாட வேளைகள், உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் பள்ளி நேரம் முடிந்தவுடன், அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: