×

ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

ஆத்தூர், ஜூன் 11:  ஆத்தூர் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிக்காக, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பாலம் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்  மாவட்டம், ஆத்தூர் -முள்ளுவாடி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே, பழுதடைந்த பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு, அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலம் அமையப்பெறும் இடத்தை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து, கடைகள் கட்டியுள்ளனர். மேலும், அங்குள்ள திறந்தவெளி கிணற்றின் தண்ணீரை, அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பாலம் கட்டுமான பணிக்காக, அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், பாலம் கட்டுமான பணிகளை நேற்று தடுத்து நிறுத்தினர்.
மேலும், கடைகள் மற்றும் திறந்தவெளி கிணற்றை அகற்றாமல், பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை ஏற்கனவே அனுப்பி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம், நெடுஞ்சாலை திட்ட உபகோட்ட பொறியாளர் தினேஷ் தேசியா, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுநல சேவைக்கு பயன்படுத்தப்படும் இடங்களை அப்புறப்படுத்தாமல், பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Attur ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...