கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வாழப்பாடி. ஜூன் 10: வாழப்பாடி அடுத்த கரியகோயில் அணையில் இருந்து, பழைய பாசன பகுதிகளுக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டியில் கரியகோயில் அணையில் இருந்து, பழைய மற்றும் புதிய பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அணையில் இருந்து பழைய பாசன பகுதிகளுக்கு, நேற்று காலை 8 மணியளவில், வலது மற்றும் இடது பிரதான மதகுகளின் மூலம், விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 3.45 மில்லியன் கனஅடி வீதம், 23 நாட்களுக்கு 79.35 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிய பாசன பகுதிகளுக்கு ஜூலை 3ம்தேதி முதல், அணையின் வலதுபுற கால்வாய் வழியாக விநாடிக்கு 15 கனஅடி வீதம் மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக விநாடிக்கு 15 கனஅடி வீதம் 30 கனஅடி தண்ணீர் என, நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கனஅடி வீதம், 20 நாட்களுக்கு 51.80 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிகழ்ச்சியில் சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், ஆத்தூர் சரபங்கா வடிநில உபகோட்ட செயற்பொறியாளர் கவிதாராணி, ஆத்தூர் ஆர்டிஓ சரண்யா, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புசெழியன், புழுதிக்குட்டை ஆணைமடுவு பிரிவு உதவி பொறியாளர் விஜயராகவன், ஆர்ஐ இந்துமதி, விஏஓ சையத் சாஷீர், நல்லுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: