திருப்பூர் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 1,305 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு அணை

திருப்பூர், ஜூன் 11: திருப்பூர் மாவட்டத்தில்  கட்டி முடிக்கப்பட்ட அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கான 1,305  பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை அமைச்சர்கள் நேற்று வழங்கினர். திருப்பூர்  மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு  நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கான 1305  பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணையும், மானியத்துடன் தாங்களே வீடு கட்டிக் கொள்ள  514 பயனாளிகளுக்கு பணி துவங்க ஆணையும் வழங்கினர்.நிகழ்ச்சிக்கு மாவட்ட  வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். எம்பி சுப்பராயன், எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாடு வாரியம் திருப்பூர் கோட்டம் மூலம் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் மற்றும் நீர்  நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மொத்தம்  3,840 வீடுகள் ரூ.302.39 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2,788 வீடுகளின் கட்டுமானப் பணிகள்  ரூ.253.26 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சார்பில், பட்டா உள்ள நிலங்களில்  வசிக்கும் ஏழைகள் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 11,754 வீடுகள் ஒப்புதல்  பெறப்பட்டு 10,138 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,621  வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள் மங்கலம் ஊராட்சி மற்றும் சின்ன  மருதூர் ஊராட்சிக்கு ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் அல்கெட் சொல்யூசன்  நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட நடமாடும் தகன  மேடை வாகனத்தின் சாவியை ஊராட்சித்தலைவரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அன்பழகன்  உதவி பொறியாளர்கள் சரவணபிரபு, சர்மிளா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: