கோலனிமட்டம் பகுதிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

ஊட்டி, ஜூன் 11: அதிகரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கோலனிமட்டம் பகுதிக்கு அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள செலவீப் நகர் மற்றும் கோலனி மட்டம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஏழை, எளிய கூலித் தொழிலாளர்கள். இவர்கள் தங்கள் எந்த ஒரு தேவைகளுக்கும் அருகில் உள்ள ஊட்டி அல்லது குன்னூர் போன்ற பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.

இந்த கிராமங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த கிராமத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள அதிகரட்டி அல்லது கேத்தி பாலாடா பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கே செல்ல வேண்டும்.

இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் அனைத்து மருத்துவ தேவைகளுக்கும் அதிகரட்டி அல்லது ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதிக்கு அரசு பஸ்கள் அல்லது மினி பஸ்களை இயக்க கோரி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை கண்டு கொள்வதில்லை. கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல குறைந்தபட்சம் 3 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது, இந்த கிராமத்தை சுற்றியுள்ள காடுகளில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை, பன்றிகள் போன்ற வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டது.

இருப்பினும், வனங்களின் வழியாகவே தினமும் சிறு குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை அனைவரும வெகு தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் இந்த கிராமத்திற்கு செல்ல பஸ் வசதிகள் இல்லாத நிலையில், ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பணியை முடித்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கிராமங்களுக்கு பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக, பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த கிராமத்திற்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: