சிங்காநல்லூர், சாயிபாபா காலனியில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு

கோவை, ஜூன் 11: கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக கிடந்தார். இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் அதிக மதுபோதையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் இல்லை. இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் புறப்படும் தடத்தில் நேற்று முன்தினம் ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனைப்பார்த்த பயணிகள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 65 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: