×

ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பிரசாரம் செய்ய 200 குழுக்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

வேளச்சேரி: நீட் தேர்வுக்கு  விலக்கு,  இந்தியை திணிக்க கூடாது, தமிழக அரசுக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும், நீர்நிலை மற்றும் புறம்போக்கு குடியிருப்புவாசிகளை வெளியேற்ற கூடாது. தமிழக அரசு அவர்களுக்கு பட்டா வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்  தென்சென்னை மாவட்டம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து மக்கள் ஆதரவை திரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்   200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் தொடர்ந்து நேற்று முதல் 10 நாட்களுக்கு காலை, மாலை என, 50 வீடுகள் வீதம் சென்று பிரசாரம் செய்ய உள்ளனர். இதன்‌ தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை சென்னை தரமணி சந்திப்பு அருகே நடந்தது. நிகழ்ச்சியில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்துகொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியதாவது:

ஒன்றிய அரசு ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் உள்ள   காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தில், வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும்.  நகர்ப்புற ஏழை மக்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வர வேண்டும். மக்கள் விரோத போக்கினை எதிர்த்து ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல், அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராடினால் எப்பேர்பட்ட ஆட்சியையும் பணிய வைக்க முடியும். இவ்வாறு அவர்  கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வேல்முருகன், வேளச்சேரி பகுதி செயலாளர் முகமது ரபிக் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : United Kingdom ,
× RELATED பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட...