×

மதுரை அரசுப் பொருட்காட்சியில் ரூ.12.55 லட்சம் வசூல் கலெக்டர் அனீஷ்சேகர் தகவல்

மதுரை, ஜூன் 9: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப்பொருட்காட்சியை நேற்று முன்தினம் வரை, 90,361 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.12,55,495 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என கலெக்டர் அனீஷ்சேகர் தகவல் கூறினார்.தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.இதுகுறித்து கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், ‘‘கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய பொருட்காட்சி, தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 212வது அரசுப் பொருட்காட்சியாகும். தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணமாக பெரியவர்க்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை, 70,377 பெரியவர்களும், 19,984 சிறியவர்கள் என மொத்தம் 90,361 நபர்கள் அரசுப் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.12 லட்சத்து 55 ஆயிரத்து 495 வருவாய் கிடைத்துள்ளது. 30 அரசுத்துறைகள், 6 அரசு சார்ந்த நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன.தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் வகையில் ‘‘விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பிலும், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பாக குறளோவிய கண்காட்சி அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்காட்சியை காண வருகை தரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினர்களிடையே இந்த 2 அரங்குகளும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல, சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பங்கேற்று மகிழ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், பல்பொருள் விற்பனை அங்காடி போன்ற 10 தனியார் அரங்குகளும், தரத்துடன் கூடிய சுகாதாரமான சிற்றுண்டி விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது’’ என்றார்.

Tags : Madurai Government Exhibition ,Anish Shekar ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை