அனைத்து வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி கடன் வழங்க ஏற்பாடு

கிருஷ்ணகிரி, ஜூன் 9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து வங்கிகள் சார்பாக 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி மதிப்பில் கடன்கள் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இந்தியன் வங்கி சார்பாக 75ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கிகள் இணைந்து நடத்தும் கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். டாக்டர்.செல்லக்குமார் எம்பி., பிரகாஷ் எம்எல்ஏ, இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பழனிகுமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், ‘75ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அனைத்து வங்கிகள் பங்கு பெற்ற வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாமில், 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி மதிப்பில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும். மேலும், வங்கிகள் தகுதியுடையவர்களுக்கு கல்வி கடன்களை தாமதமின்றி வழங்கி, அவர்கள் கல்வி கற்க உதவ வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், கனரா வங்கியின் மண்டல மேலாளர் ஆனந்த், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: