×

அரசின் நடவடிக்கையால் கடந்த ஆண்டை விட மத்திய மண்டலத்தில் கொலை வழக்குகள் குறைவு


திருச்சி, ஜுன்9:  தமிழக அரசின் நடவடிக்கையால் மத்திய மண்டலத்தில் கொலை வழக்குகள் 25சதவீதம் குறைந்துள்ளது என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய மண்டலத்தில் முதல்வர் உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க Drive Against Drup என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1180 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 758 வழக்குகள் பதியப்பட்டன. இவர்களில் 83 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதுடன் 24 குற்றவாளிகள் மீது நண்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்காக 5 பேர் சிறையில் அடைக்கப்பட்னர்.
மேலும் கஞ்சா குற்றவாளிகளின் நடத்தையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக காவல் நிலையங்களில் குற்றவாளிகள் மீது சரித்திரப் பதிவேடுகள் துவக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அவற்றை விநியோகம் செய்தவர்களை கண்டறியப்பட்டு 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சட்ட விரோத வழியில் பணம் சேர்த்த 46 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடந்த ஜூன் மாதம் முதல் ஒரு வருடத்தில் 581 ரவுடிகள் கைது செய்யப்பட்டதில், 184 பேர் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 2,030 ரவுடிகள் மீது குற்றவியில் நடைமுறை சட்ட பிரிவு 110ன் கீழ் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும் 70 ரவுடிகள் நன்னடத்தை பிணையை மீறியதற்காக அவர்கள் மீது பிணை முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதற்காக 585 குற்றவாளிகள் கடந்த ஓராண்டில் மட்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலை வழக்குகள் வெகுவாக குறைந்து, இந்த ஆண்டில் 2 ரவுடி கொலை வழக்குகள் மட்டுமே மத்திய மண்டலத்தில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டில் மொத்தம் பதிவான கொலை வழக்குகள் ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது முந்தைய ஆண்டைகாட்டிலும் 25 சதவீதம் குறைந்து உள்ளது. குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த அப்பாவி பொதுமக்களின் குடும்பத்தினரை காவல்துறையினர் வார இறுதி நாட்களில் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் அவர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நிவாரண தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மத்திய மண்டலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த 103 நபர்கள் காவல்துறையினர் மூலம் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டு, தொடர் நடவடிக்கையின் மூலம் 17 பேர் அவர்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். சாதி மத மோதல்களால் பாதிப்புக்குள்ளான 71 கிராமங்கள் மத்திய மண்டல காவல்துறையினரால் தத்தெடுக்கப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், கிராமங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், படித்த இளைஞர்கள் உரிய வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Central Zone ,
× RELATED வீடுகளில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை, அதிரடி சோதனை