கோவில்பட்டியில் வ.உ.சி. நகரும் புகைப்பட கண்காட்சி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சென்று வருகிறது. அதன்படி கோவில்பட்டிக்கு வந்த வ.உ.சிதம்பரனார் புகைப்பட கண்காட்சி வாகனத்திற்கு யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், வாகனத்தில் உள்ள வஉசி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு லாயல் மில் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு லாயல் மில் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, கரிதா பள்ளி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்எஸ்டிஎம் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் பிடிஓ சுப்புலட்சுமி, இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி, திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி, பள்ளி தலைமையாசிரியர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: