விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் மெஷின் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு

சென்னை: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்தின் வழியில் உள்ளே செல்லவும், வெளியேறவும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகரும் படிக்கட்டும், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை மற்றும் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வசதிகளின் மொத்த மதிப்பீடு ரூ.87 லட்சம். இவற்றை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் திரிசூலம் ரயில் நிலையத்தின் வழியில் உள்ளே செல்லவும், வெளியேறவும் ரூ.80 லட்சம் மதிப்பில் நகரும் படிக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டு இன்று (நேற்று) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பொது தளத்திலிருந்து நுழைவாயிலின் தரைதளத்திற்கு வருவதற்கான கூடுதல் நகரும் படிக்கட்டு பயணிகள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை தரைதளத்திலிருந்து பொது தளத்திற்கு மேலே செல்ல மட்டும் நகரும் படிக்கட்டு இருந்தது. இதேபோன்று பயணிகளின் வசதிக்காக பொது தளத்திலிருந்து நடைமேடை வரை செல்ல மேலும் இரண்டு நகரும் படிக்கட்டுகள் இம்மாதம் இறுதிக்குள் அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 36 நகரும் படிகட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏசி வசதியுடன் பாலூட்டும் அறை ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறைகளை இனிவரும் காலங்களில் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் காற்றிலிருந்து குடிநீர் வழங்கும் நவீன இயந்திரம் ரூ.6 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம் வளிமண்டல காற்றை குடிநீராக மாற்றுகிறது. இந்த இயந்திரம் பல்வேறு செயல்முறைகளுக்கு உட்பட்டு பயணிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக சேமிக்கப்படுகிறது. இந்த குடிநீர் 100 சதவீதம் தூய்மையானது. இந்த குடிநீரில் அதிக அளவில் ஆக்சிஜன் உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: