×

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்கு தோண்டிய பள்ளத்தை சீரமைப்பதில் மெத்தனம்: பொதுமக்கள் அவதி


தண்டையார்பேட்டை: மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தோண்டிய பள்ளத்தை சீரமைப்பதில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை,  பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த முதற்கட்ட திட்டத்தின் நீட்டிப்பாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர்  விம்கோ நகர் இடையே, 9.02 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி, 2016  ஜூலையில் துவங்கியது. வண்ணாரப்பேட்டையில் இருந்து தியாகராயர் கல்லுாரி -  கொருக்குப்பேட்டை வரை, 2.3 கி.மீ., துாரத்திற்கு இப்பாதை சுரங்கத்திலும், கொருக்குப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை,  6.9 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலத்திலும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டன. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் இந்த பள்ளங்களை மூடி, சாலை சீரமைத்து தரப்படும், என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இதுவரை சாலை பள்ளங்களை சீரமைத்து தரவில்லை. குறிப்பாக, தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை தொடங்கி, அகஸ்தியா தியேட்டர் இருந்த இடம் வரை  சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு போன்றவை அமைக்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வழியே தினசரி பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வோர், முறையயான வடிகால் வசதி செய்து தரப்படாததால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்குவதுடன், மேற்கண்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தங்கசாலை முதல் விம்கோ நகர் வரை தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், தினசரி விபத்து, நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், அகற்றப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், தெருவிளக்குகளும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், குறுகலான தெருக்களில் பயணித்து இன்னலுக்கு ஆளாகிறோம். அண்ணாநகர், ஷெனாய் நகர், தேனாம்பேட்டை,  சென்னை சென்ட்ரல், அண்ணாசாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நிதி ஒதுக்கி சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வசதிகளை செய்தது. ஆனால், வடசென்னையை புறக்கணித்துவிட்டது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி பிரதீபன் கூறுகையில், ‘‘தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பற்காக அமைத்த தற்காலிக ராட்சத இரும்பு தூண்கள் அப்புறப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஜூலை  மாத இறுதியில் சாலை சீரமைக்கும் பணி நடைபெறும்,’’ என்றார்.

Tags : Tiruvottiyur Highway ,
× RELATED உரிய ஆவணம் இல்லாமல் ₹3.50 லட்சத்துடன் சிக்கிய வாலிபர்