சேலம் அண்ணா பூங்கா, மாணவர் விடுதியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

சேலம், ஜூன் 8: சேலம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், அண்ணா பூங்கா, மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினரின், 2 நாள் ஆய்வு சேலம் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ தலைமையிலான அக்குழுவினர், சேலம் அண்ணா பூங்காவிற்கு சென்று ₹5.40 கோடி மதிப்பில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரிக்கு சென்று ₹12.80 கோடி மதிப்பில் கரைகள் பலப்படுத்தும் பணி மற்றும் கம்பி வேலி அமைப்பு உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியை சுற்றுலா தலமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, சீலநாய்க்கன்பட்டிக்கு ெசன்ற குழுவினர், அங்குள்ள உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம், மண் பரிசோதனை நிலையம், உயிர்உர உற்பத்தி நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர், அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிக்கு திடீரென சென்ற இக்குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

அத்துடன், விடுதியில் வழங்கப்பட்டு வரும் உணவு, மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது மாணவர்கள், `வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கியிருந்து படித்து வருகிறோம். பேருந்துகளில் பயணம் செய்யும்போது, விடுதி முகவரிக்கான அடையாள அட்டை, பஸ் பாஸ் போன்று எதுவும் இல்லாததால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது,’ என்றனர். இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாக குழுவின் தலைவர் எம்எல்ஏ டிஆர்பி.ராஜா தெரிவித்தார். அப்போது, குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வரன், எழிலரசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியன், முகம்மது ஷாநவாஸ், செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், எம்எல்ஏ சதாசிவம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து இக்குழுவினர், முத்துநாய்க்கன்பட்டியில் ரயில்வே மேம்பாலப்பணி, ஓமலூரில் சாலை அகலப்படுத்தும் பணி, மேச்சேரி அடுத்த காமனேரியில் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ₹10.54 லட்சம் நலஉதவிகைள வழங்கி விவசாயிகளிடம் கலந்துரையாடினர். மேலும், ஊ.மாரமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு₹%59 லட்சம் கடனுதவி வழங்கினர். ஆய்வின்போது துணை செலயாளர் சிவக்குமரன், டிஆர்ஓ ஆலின் சுனேஜா, கூடுதல் கலெக்டர் பாலசந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலஉதவிகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், கலந்து கொண்ட சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டரும், பிற மாற்றுத்திறனாளிகள் 62 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரும் என மொத்தம் 70 பேருக்கு ₹56.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம், சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைமையில் நடந்தது. இதில், அனைத்து துறைகளின் சார்பில், சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு, பணிகளின் தற்போதைய நிலவரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: