×

சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு சான்றிதழ் மழை நீரில் தவழ்ந்து வரும் ஆட்டோ சமயபுரம் அருகே முத்தீசுவரத்தில் சோழர்கால நில அளவுகோல்கள் கண்டுபிடிப்பு


முசிறி, ஜூன் 8: மணச்சநல்லூர் தாலுகா கண்ணனூர் பகுதியில் சோழர் கால நில அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளையும் அளவுகோல்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறியதாவது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள கண்ணனூர் பொதுக்காலம் 14ம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜருக்கு உதவுவதற்காக மைசூர் பகுதியில் இருந்து சோழ நாட்டிற்கு வந்த ஹெய்சள அரசர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூரை தங்கள் தலைநகரமாக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலகட்டத்தில் இப்பகுதியில் உருவான பல கோயில்களில் முக்தீஸ்வரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்று மாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இன்று அரசின் திருப்பணிக்காக காத்திருக்கிறது.

இக்கோயிலில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி மற்றும் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அகிலா ஆகியோர் பொதுக்காலம் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த அளவுகோல்களையும் 14, 18ஆம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள் சிலவற்றையும் கண்டறிந்தனர். கள ஆய்வின்போது சமயபுரம் கோயில் இளநிலை பொறியாளர் அஜந்தன் உதவிகளை செய்து கொடுத்தார். இதையடுத்து கல்வெட்டை களஆய்வு செய்ததில் இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14 ஆம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் இறைவனை கழுகிறை நாயனார் என்று அழைப்பதாக உள்ளது. இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடும் முக்தன் செட்டியார், திருச்சி தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகிய பெருமக்கள் அவர்தம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கட்டுமான பகுதிகளில் திருப்பணிக்கு உதவியவர்களாக இருக்கலாம்.

ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ.மீ அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்பகுதியில் பதிவாகியுள்ள கோல் கட்டுமானத்திற்கு சிற்பிகள் பயன்படுத்திய தச்சக் கோலாகலாம். புன்செய், நன்செய் நிலங்களை அழைப்பதற்காக சோழர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த நிலை அளவுகோல்கள் அந்தந்த ஊர் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டு அல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள் சில கோயில்களில் நன்செய்க் கோல், புன்செய்க் கோல் பொறிப்புகளுடனும், சில கோயில்களில் அதற்கு அடையாளக் குறிப்புகள் இல்லாமலும் காணப்படுகின்றன.

முக்தீசுவரர் பெருமண்டபம் தென்புற குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீட்டர் நீளமுள்ள அளவுகோல் அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்க பயன்பட்ட அளவுகோலாகும். நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்கு பட்டிகையில் 3.76 மீட்டர் நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன் கோயிலில் மைய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட நன்சை கல்வெட்டும் இதே அளவில் உள்ளது. முக்தீசுவரர் திற்கு அருகில் உள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்கோயில் கோபுரத்தின் உட்புற வட சுவரில் நல்ல தம்பி மகன் காவுடை நயினான் எனும் பெயர் பொறுப்பு கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கூறும் காவுடை நயினார் கோயில் திருப்பணியில் பங்கேற்றவராக இருக்கலாம் என்று கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் கூறியுள்ளார்.

Tags : Superintendent ,Chola ,Muttiswaram ,Auto Samayapuram ,
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்