×

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

பொன்னமராவதி,ஜூன் 8: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினருமான பெரியசாமி பேசியது, திமுக அரசின் ஒராண்டுகால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் உள்ளன. அவை வரும் காலத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி ஊரக மக்களின் நூறுநாள் வேலை உறுதி திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தி தரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு செய்திருப்பதைப்போல தமிழக அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் 150 நாள்களாக உயர்த்தி தர வேண்டும். புதுக்கோட்டையில் தமிழக முதல்வர் நலத்திட்டத்திட்டங்கள் வழங்க வரும் நாளில் புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கனவுத்திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார். மாநாட்டில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். பொன்னமராவதி வட்டம் முழுவதும் விவசாய நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏனாதி ராசு, தர்மராஜன், முன்னாள் மாவட்டச்செயலர் செங்கோடன்மாவட்ட பொருளர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலர் செல்வம் நன்றி கூறினார்.

Tags : Communist Conference of India ,Ponnamaravathi ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...