ஆக்கிரமிப்பாளர்ளிடமிருந்து கோயிலை மீட்க கோரி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

தாராபுரம், ஜூன் 8: ஆக்கிரமிப்பாளர்ளிடமிருந்து கோயிலை மீட்க கோரி தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் கோப்பன கவுண்டன் பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 2 மாதங்களில் 3வது முறையாக ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பின் நிறுவனர் பவுத்தன் தலைமையில் 60 பெண்கள் 20 ஆண்கள் உட்பட 80 பேர் பேரணியாக வந்து தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தை ற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் நூறாண்டுகளாக நாங்கள் வழிபட்ட கன்னியாத்தாள், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவில்களை அருகிலுள்ள தனியார் விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் ஆக்கிரமித்து திருவிழா நடத்தவிடாமல் 4 ஆண்டாக இடையூறு செய்கின்றனர். கோவில்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து 3 முறை ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்.  ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் அமைந்துள்ள இடத்தை நில அளவீடு செய்து தனியாரிடம் இருந்து மீட்டு ஒப்படைப்பதில் பாரபட்சம் காட்டி வருகின்றனர். எனவே உள்ளூர் நில அளவையாளர்களுக்கு பதிலாக மாவட்ட அளவில் உள்ள அலுவலகத்தைச் சார்ந்த நில அளவையாளர்கள் நேரில் வந்து கோவில் இடத்தை நில அளவை செய்து மீண்டும் எங்கள் சமுதாய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், எனக் கூறினர். இத்தகவல் அறிந்த தாராபுரம்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து தாராபுரம் ஆர்டிஓ குமரேசன் முன்னிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 இதில் அரசு நில அளவையாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் முன் நில அளவீடு செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. நிலத்தை அளவீடு செய்து கோவில்களை ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆதி தமிழர் ஜனநாயக பேரவையின் நிறுவனர் பௌத்தன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Related Stories: